போலி இலக்கத்தகடு பொருத்தி வாகனத்திற்கு எரிபொருள் பெற முயன்ற ஒருவருக்கு நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.
வீரகுள – நெல்லிகஹமுல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிறிய லொறியில் போலி இலக்கத் தகடு பொருத்தி டீசல் பெற முற்பட்ட லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவருக்கு கம்பஹா நீதவான் மஞ்சுள கருணாரத்ன ரூ. 25,000 அபராதம் விதித்தார்.

வத்துருகம, இகுருகல்லவைச் சேர்ந்த லக்ஷான் பண்டார என்ற லொறி சாரதிக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்த லொறியின் இலக்கத் தகடு போலியானது என்பதை கடமையிலிருந்த பொலிசார் தெரிந்து இலக்கத் தகடு தொடர்பில் அதிகாரிகள் சாரதியிடம் விசாரணை நடத்தினர்.
கராஜில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் இலக்கத்தகட்டை பொருத்தியபடி அவர் எரிபொருள் நிரப்ப வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.