தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது!

0
53

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆண்டுக்கான முதல் அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் கூடியுள்ளது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி கூடவுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல் நாள் உரையை நிகழ்த்தவுள்ளார்.

சட்டசபை கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர், முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி கலந்துரையாடுவது வழக்கமாகும். இதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆண்டுக்கான முதல் அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது.

இந்த கூட்டத்தில் ஆளுநரின் உரை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசின் உரையை ஆளுநர் ஏற்கனவே புறக்கணித்துள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசின் உரையை ஆளுநர் சட்டசபையில் வாசிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் முதலமைச்சர் அண்மையில் வெளியிட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு இந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் ஆராயப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.