தாய்லாந்தில் பொலிஸாரை தாக்கிய பூனை கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் பேங்காக் பகுதியில் ஒருவர் ஷார்ஹேர் வகை பூனை ஒன்றை நுப் டாங் என பெயரிட்டு ஆசையாக வளர்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இந்த பூனை காணாமல் போனது.
அதை தேடியலைந்த உரிமையாளர் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். காணாமல் போன பூனை நுப் டாங் பல இடங்களில் பயணித்து பூங்கா ஒன்றில் இருந்துள்ளது.
பார்க்கவே அழகாக இருக்கும் அந்த பூனை ஆதரவின்றி இருந்ததை கண்ட அப்பகுதி பொலிஸார் அதை தூக்க சென்றபோது அது அவர்களை நகத்தால் பிறாண்டி தாக்கியுள்ளது.
இதனால் நுப் டாங் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அதை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதியாக பூனை இருக்கும் போட்டோவை சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டு பூனை உரிமையாளர் தங்களை தொடர்பு கொள்ள வேண்டுமென தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நுப் டாங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள விஷயம் அதன் உரிமையாளருக்கு தெரியவந்து அவர் அங்கு சென்றபோது அவரிடமும் பூனையிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு நுப் டாங்கை பிணையில் பொலிஸார் அனுப்பியுள்ளனர்.