பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிற்கு எதிரான அழைப்பாணை உத்தரவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
கடந்த ஆண்டு நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தின்போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டது.
பண மீட்பு விவகாரம்
இந்த பண மீட்பு விவகாரத்தின் சந்தேகநபர்களில் ஒருவராக, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பெயரையும் நீதிமன்றம் பட்டியலிட்டிருந்தது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அழைப்பாணை உத்தரவு இன்றைய தினம் (26.06.2023) மேன்முறையீட்டு நீதிமன்றதினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னக்கோன் மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் இந்த தீர்ப்பினை அளித்துள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவு
போராட்டத்தின் போது ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கான ஓர் சந்தேகநபராக தேசபந்து தென்னகோனை பெயரிடுமாறு சட்டமா அதிபர் வெளியிட்ட கடிதத்தையும் இரத்து செய்யுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரட்ன ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தேசபந்துவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது.
அவ்வாறான ஒரு பின்னணியில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.