சீண்டிப் பார்க்காதீர்கள்! தாங்க மாட்டீர்கள்: இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை – தமிழக முதலமைச்சர்

0
246

செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை என தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் இன்றைய தினம் (15.06.2023) காணொளியொன்றை அவர் பதிவிட்டுள்ளார்.

https://www.facebook.com/watch/?v=5995106953949225

அதில் மேலும், பத்து ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதய நோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா? செந்தில் பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் என்றால், அவரை அழைத்து விசாரணை நடத்துவதை நான் தவறு என்று சொல்லவில்லை.

ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை! அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதுவும் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதுவும் இரண்டாவது முறையாக அமைச்சராக இருக்கிறார். நாள்தோறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்.

தீவிரவாதியை போல அடைத்து விசாரிக்க என்ன அவசியம்

அப்படிப்பட்டவரை ஏதோ தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது? அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த போது முழு ஒத்துழைப்பு தந்தார். எந்த ஆவணங்களை எடுத்திருந்தாலும் அது தொடர்பாக விளக்கமளிக்கத் தயார் என்று சொல்லி இருந்தார்.

அதற்குப் பிறகும் 18 மணி நேரமாக அடைத்து வைத்துள்ளனர். யாரையும் சந்திக்க அனுமதி இல்லை. இறுதியாக அவருக்கு உடல்நலம் முழுமையாக பாதிக்கப்பட்டு இதயவலி அதிகமான பின்னர்தான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதிலும் அலட்சியம் காட்டி இருந்தார்கள் என்றால், அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்!

சீண்டிப் பார்க்காதீர்கள்! தாங்க மாட்டீர்கள்: இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை - தமிழக முதலமைச்சர் | Cm Stalin S Important Order On Tamil Nadu

இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்? அறிவிக்கப்படாத அவசரநிலையில் நாடு இருக்கிறதா? அப்படித்தான் இருக்கிறது, அமலாக்கத்துறையின் நடவடிக்கை. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களது அரசியலைச் செய்ய நினைக்கிறது.

மக்கள் விரோத அரசியல்

மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பா.ஜ.க. தயாராக இல்லை. பா.ஜ.க.வை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால்தான் மக்கள் பா.ஜ.க.வை நம்புவார்கள். பா.ஜ.க.வின் அரசியலே மக்கள் விரோத அரசியல்தான்!

அத்துடன் நிறைய கழக உடன்பிறப்புகள் தலைவர் கலைஞர் பேசிய ஒரு வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள். “என்ன யாரும் அடிக்க முடியாது.. ஞாபகம் வெச்சிக்க.. நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது…” என்று கலைஞர் பேசிய வீடியோ. அதுதான் இப்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.

எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள். எங்களுக்கு என்று தனித்த அரசியல் கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. மதவாதம் சாதியவாதம், சனாதனம், பிறப்பால் உயர்வு தாழ்வு, மேல் – கீழ், இந்த மாதிரியான மனித சமுதாயத்துக்கு விரோதமான பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள்.

நிமிர்ந்து நிற்போம்.! 

இந்த சக்திகளை அரசியல் களத்தில் எதிர்கொள்வதுதான் எங்களின் வழக்கம். வாதங்களுக்கு வாதங்கள் வைக்கத் தயாராக இருக்கிறோம். அதை விடுத்து, மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம்.! நேருக்கு நேர் சந்திப்போம்! நாங்கள் ஆட்சிக்காக மட்டும் கட்சி நடத்துபவர்கள் இல்லை. நாங்கள் கொள்கைக்காகக் கட்சி நடத்து கிறவர்கள்.

சீண்டிப் பார்க்காதீர்கள்! தாங்க மாட்டீர்கள்: இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை - தமிழக முதலமைச்சர் | Cm Stalin S Important Order On Tamil Nadu

கொள்கைகளைக் காப்பாற்றத்தான் கடைசி வரைக்கும் போராடுவோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறே இதற்கு சாட்சி! ஆதிக்க மனோ பாவத்துடன் எதிர்த்தால், கொள்கைப் பட்டாளத்துடன் உறுதியோடு தடுப்போம். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், மிசா காலம் என, நாங்கள் பார்க்காத அடக்குமுறைகள் இல்லை, நாங்கள் நடத்தாத போராட்டங்கள் இல்லை.

தி.மு.க. நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இல்லை என்றால் டெல்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். சீண்டிப் பார்க்காதீர்கள். தி.மு.க.வையோ-தி.மு.க.காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை என குறிப்பிட்டுள்ளார்.