அரச அதிகாரிகளாக இருந்து அரசியல் செய்பவர்கள் பதவி விலக கோரிக்கை

0
203

அலுவலகங்களில் அரச அதிகாரிகளாக இருந்து கொண்டு அரசியல் செய்பவர்கள் எந்த கட்சியானாலும் தனது கடமையினை பதவி விலகல் செய்துவிட்டு அரசியல் செய்ய வேண்டும் என வர்த்தக துறை இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகள் என்றாலும் சரி அரசாங்க அதிகாரிகள் என்றாலும் சரி சமூகத்திற்கு கடமையாற்ற வேண்டும் என்ற சமூக பொறுப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலில் கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் நடமாடும் சேவை நேற்று (13.06.2023) மட்டக்களப்பு வந்தாறு மூலையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் 150 நடமாடும் சேவைகள் நடாத்தும் ஆளுனர் செந்தில் தொண்டமானின் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த நடமாடும் சேவை நடாத்தப்படுகின்றது.

நடமாடும் சேவை

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை கலாசார மத்திய நிலையத்தில் இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டது. வந்தாறுமூலை, சித்தாண்டி, சந்திவெளி, ஈரளக்குளம், மைலவெட்டுவான் உட்பட பல்வேறு பகுதி மக்களின் நன்மை கருதி இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் போது நடமாடும் சேவையும் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இதன்போது பல்வேறு சேவைகள் முதியோர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதேபோன்று காணி தொடர்பிலான விடயங்கள், சமுர்த்தி, அடையாள அட்டை தொடர்பான விடயங்கள் நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

சுதேச மருத்துவசேவை, கண் பரிசோதனைகள், பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தினதும் கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேகைள், சுகாதார திணைக்களத்தின் சேவைகள் என பல்வேறு சேகைள் இன்று நடமாடும் சேவைகள் ஊடாக வழங்கப்பட்டன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் அருள்மொழி, கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.