சுற்றுலா தலமான கான்கன் பகுதியில் கொத்தாக 8 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மெக்சிகோவிற்கு பயணம் செய்வது ஆபத்தில் முடியும் என்று நியூயார்க் பொலிஸ் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
அழுகிய நிலையில் சடலங்கள்
கான்கன் கடற்கரை மற்றும் ஹொட்டல் பகுதியில் இருந்து பத்து மைல் தொலைவில் சடலங்கள் வார இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. அழுகிய நிலையில் காணப்பட்ட அந்த சடலங்கள் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், ஒரு வாரம் முதல் இரண்டு மாதங்களுக்கு முன்பு சடலங்கள் அங்கு வீசப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
ஐந்து சடலங்கள் கைவிடப்பட்ட கட்டுமான தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றில் மூன்று முன்னர் காணாமல் போனவர்கள் என பின்னர் அடையாளம் காணப்பட்டது.
இந்த நிலையில், தன்னார்வலர்கள், மாயமானதாக புகார் அளிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் என ஒரு குழு இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
இந்த நிலையில் மேலும் மூன்று சடலங்கள் ரிசார்ட்டின் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கான்கன் புறநகரில் ஒரு தனி தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மூன்று சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மெக்சிகோவுக்குச் செல்வது ஆபத்து
மட்டுமின்றி, துலூமுக்கு தெற்கே உள்ள நகரமான ஃபெலிப் கரில்லோ புவேர்டோவிலும் இதே போன்ற தேடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, முன்னாள் நியூயார்க் காவல் துறை விசாரணை அதிகாரி மைக்கேல் அல்காசர் தெரிவிக்கையில்,
மெக்சிகோவுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில், அமெரிக்க மக்கள் மெக்சிகோவுக்குச் செல்வது ஆபத்தில் முடியலாம் என்றார்.
முன்னதாக சுற்றுலா பயணிகளை எச்சரிக்கும் வகையில் வழிகாட்டுதலை அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த மாதம் வெளியிட்டது. அத்துடன் மெக்சிகோ முழுவதும் 12,000 பேர்கள் மாயமானதாக அளிக்கப்பட்டுள்ள புகாரையும் சுட்டிக்காட்டியுள்ளது.