வவுனியா ஏ9 வீதியில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற குடும்பஸ்தரை யாழ் நோக்கி சென்ற பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (26) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஏ9 வீதியில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் துவிச்சக்கர வண்டியில் குடும்பஸ்தர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று துவிச்சக்கர வண்டியின் மீது மோதியுள்ளது.

போட்டிபோட்டு ஓட்டம்
சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை இ.போ.ச பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் போட்டி போட்டுக் கொண்டு வீதியில் சென்றமையால் இவ்விபத்து இடம்பெற்றதாக விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
