எம்.பி.க்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி கோர்ட்டு அவர்களை குற்றவாளியாக அறிவித்தது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் முதல் திகதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது பட்ஜெட் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியது.
ஆளும் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.யான ஆமி என்டியாயோ கினிபியை (Amy Ndiayo Ginibi) எதிர்க்கட்சியை சேர்ந்த மசாதா சாம்ப் என்ற எம்.பி. கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த கினிபி, மசாதா மீது நற்காலியை வீசி எறிந்தார்.

அப்போது மசாதாவும், எதிர்க்கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.பி.யான மாமடோவ் நியாங்கும்(Mamatov) கினிபியின் வயிற்றில் எட்டி உதைத்தனர். இந்த சம்பவம் நடந்த சமயத்தில் கினிபி (Amy Ndiayo Ginibi) கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தன்னை கண்மூடித்தனமாக தாக்கிய சக எம்.பி.க்கள் மீது கினிபி வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை அந்த நாட்டின் தலைநகர் தக்கார் கோர்ட்டில் நடந்து வந்ததது.

நேற்று இறுதி விசாரணை நடந்தபோது, மசாதா மற்றும் நியாங் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி கோர்ட்டு அவர்களை குற்றவாளியாக அறிவித்தது.
அப்போது கினிபி (Amy Ndiayo Ginibi) சார்பில் ஆஜரான வக்கீல், குற்றவாளிகள் இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என நீதிபதிகளை வலியுறுத்தினார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் இருவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தனர்.