பணம் இல்லாததால் நுவரெலியா நகரில் தவித்துக் கொண்டிருந்த 17 வயதுடைய காதலர்களை பொலிஸார் பொறுப்பேற்று பெற்றோரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
களுத்துறை பயாகல பிரதேசத்தை சேர்ந்த இளைஞனும் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த யுவதியுமே இவ்வாறு பொலிஸாரால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பேஸ்புக்கில் அறிமுகம்
இவர்கள் இருவரும் பேஸ்புக்கில் அறிமுகமாகி காதலர்களாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் சிவில் பாதுகாப்பு வீரரான யுவதியின் தந்தை இந்த காதல் தொடர்பு குறித்து அறிந்துகொண்டு யுவதியை எச்சரித்து கைத்தொலைபேசியையும் மீளப்பெற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் கடந்த 6 ஆம் திகதி காதலனை தேடி யுவதி பாணந்துறை நகருக்கு வந்துள்ளார்.

அதன் பின்னர் காதலனை சந்தித்து இருவரும் கொழும்பு சென்று அங்கிருந்து நுவரெலியாவுக்கு சென்றுள்ளனர். நுவரெலியாவில் இருவரிடமும் பணம் இல்லாத காரணத்தால் கைத்தொலைபேசியை விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.
எச்சரித்த பின்னர் பெற்றோரிடம் ஒப்படைப்பு
இதை பார்த்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் பொலிசாருக்கு அது குறித்து அறிவிக்கவே பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் அவ்விடத்திற்கு வந்து இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது இருவரும் பட்டினியால் இருப்பதை அறிந்த பொலிஸார் இருவருக்கும் உணவு வழங்கியதுடன் பெற்றோரை வரவழைத்து எச்சரித்த பின்னர் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
