பையா ஒரு பிளேட் பானிபூரி குடு.. சாலையோர கடையில் பானிபூரியை ருசித்த யானை!

0
936

யானை ஒன்று சாலையோர கடையில் பொறுமையாக பானிபூரியை சுவைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பானிபூரி 

இந்தியா முழுவதும் அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரமாய் கிடைக்கும் உணவு என்றால் கண்ணை கட்டிக் கொண்டு பானிபூரியை கையை காட்டிவிடலாம். மசித்து அரைக்கப்பட்ட உருளைக்கிழங்கில் மசாலா சேர்த்து பின்னர் அதனை குட்டி குட்டி பூரிக்குள் லாவகமாக திணித்து புதினாவும் பிற சங்கதிகளும் சேர்த்த சாறை அதன் உள்ளே நிறைத்து சாப்பிட யாருக்குத்தான் ஆசை இருக்காது?. சொல்லப்போனால் சமீப ஆண்டுகளில் பானிபூரி கடைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. காரணம் சந்தேகமே இல்லாமல் அதன் ருசி தான். மனிதர்கள் சரி யானைக்குமா பானிபூரி பிடிக்கும்? தற்போது வைரலாகும் வீடியோவை பார்த்தால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

யானை

அசாமின் தேஜ்பூரில் சாலையோர தள்ளுவண்டி கடை ஒன்றில் தான் இந்த அதிசயம் நடந்திருக்கிறது. அந்த வழியாக சென்ற யானை பானிபூரி கடையை பார்த்ததும் அதன் அருகே சென்று நிற்கிறது. அதனை கவனித்த கடைக்காரர் பானிபூரியை தயார் செய்து அதனிடம் கொடுக்கிறார். அதனை வாங்கி உள்ளே தள்ளிய யானை அடுத்தது? என கேட்பது போல பார்க்க யானையின் பசியை உணர்ந்து கொண்ட அந்த வியாபாரியும் அடுத்த பானிபூரியை நீட்டுகிறார்.

இப்படி, அடுத்தடுத்து பானிபூரியை வாங்கி ருசிக்கிறது யானை. இதனை அங்கிருந்த மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்க சிலர் இதனை வீடியோ எடுக்கின்றனர். அப்படி ஒருவர் எடுத்த வீடியோவை சமூக வலை தளத்தில் பதிவிட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த பதிவில் ஒருவர், “யானை மிகவும் பொறுமையாக பானிபூரியை சுவைத்து சாப்பிடுகிறது. இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு நிகழ்வை நான் பார்த்ததில்லை” எனக் குறிப்பிட மற்றொருவர் “எலி முதல் யானை வரை அனைத்து விலங்குகளும் நேசிக்கப்படும் மற்றும் வணங்கப்படும் நாடு இந்தியா. இங்கே புலி மனிதனுடன் படகில் பயணிக்கலாம் யானை சந்தையில் பானிபூரி சாப்பிடலாம், கோயிலில் எலிகள் பால் குடிக்கலாம். இயற்கை மற்றும் விலங்குகள் மீதான அன்பு நமது கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்” என கமெண்ட் செய்திருக்கிறார்.