லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் ராணியாருக்கு இறுதி மரியாதை செய்யப்படும் இடத்தில் புகைப்படப்பதிவு கூடாது என்ற முக்கிய விதியை ஆர்மேனிய ஜனாதிபதி Vahagn Khachaturyan மீறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த ராணியாருக்கான பொதுமக்கள் அஞ்சலி இன்று திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ராணியாருக்கான இறுதிச்சடங்குகள் பகல் 11 மணி முதல் முன்னெடுக்கப்படும்.
புகைப்படம் எடுக்க தடை
இந்த நிலையில், சிறப்பு விருந்தினர்களுக்கான பாதையூடாக ராணியாருக்கு மரியாதை செலுத்த சென்ற ஆர்மேனிய ஜனாதிபதி Vahagn Khachaturyan, ராணியாருக்கு மரியாதை செலுத்தும் காட்சியை புகைப்படமாக பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருடன் சென்றிருந்த அதிகாரி ஒருவர் தமது மொபைலில் குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அதேசமயம் பாதுகாப்புத் தேவைகள் மிகுந்த பகுதியில் அல்லது வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்குள் மக்கள் புகைப்படம் எடுக்கவோ, மொபைல் போன்கள் அல்லது பிற கையடக்க சாதனங்களைப் பயன்படுத்தவோ கூடாது என்று அரசாங்க வழிகாட்டுதல் கூறுகிறது.
குறித்த வழிகாட்டுதலை பல ஆயிரம் மக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இதுவரை கடைபிடித்த நிலையில் ஆர்மேனிய ஜனாதிபதி அதனை மீறி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார்.
2000 பேர் வருகை
மேலும், மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா தம்பதி உலக நாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் இரவு விருந்து உபசரிப்பும் ஏற்பாடு செய்திருந்தனர்.
ராணியாரின் இறுதிச் சடங்கிற்கு அரசு தலைவர்கள், பிரமுகர்கள், ஜனாதிபதிகள், ஐரோப்பிய அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் என சுமார் 2,000 பேர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. இதனிடையே, காலை 6.30 மணிக்கு பொதுமக்களுக்கான அஞ்சலி அனுமதி முடிவுக்கு வரும் என்பதால், மக்கள் மேலும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அதிகாரிகள் தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.