வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் எதிர்வரும் காலங்களில் ஓய்வு பெற்றால் எனது அணிக்கு என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது என இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் ஹயசின்த் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதோடு இதுவரை இந்த நாட்டில் இரண்டாம் நிலை வலைப்பந்து அணி உருவாக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டில் தர்ஜினி ஓய்வு பெறுவார் என்றும் அவர் உலகக் கிண்ணத்தில் இணைந்தால் அது பெரும் பலமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி லக்மி விக்டோரியாவிடம் இது குறித்து பலமுறை நீண்ட நேரம் விவாதித்தேன். இந்த அணியைப் பற்றியும் சொல்ல வேண்டும்.
இந்த அணி 2005 முதல் நான் சந்தித்த சிறந்த மற்றும் மிகவும் கீழ்ப்படிவுள்ள அணி. இந்த அணி வேகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தது. உலகக் கிண்ணத்தில் பங்கேற்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

உலகக் கிண்ணத்துக்குச் செல்வது எங்களுக்கு எளிதானது அல்ல என்பதுதான் உண்மை. இந்த அணியில் மூத்த வீரர்கள் குழு உள்ளது. தர்ஜினி அநேகமாக அடுத்த வருடம் ஓய்வு பெறுவார்.
தர்ஜினியுடன் உலகக் கிண்ணத்துக்குச் சென்றால் அது எங்களுக்கு பெரிய சாதகமாக அமையும். இல்லையெனில் இளைஞர் அணியுடன் உலகக் கிண்ணத்தில் பங்கேற்று அந்த அனுபவத்தை அவர்களுக்குக் கொடுத்து அடுத்த ஆண்டு ஆசியக் கிண்ணத்தை வெல்லத் திட்டமிடுவதே எங்கள் இலக்காக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
