இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் வகுப்புத் தோழர்களாவர்.
இலங்கையின் புகழ்பூத்த கல்லூரிகளில் ஒன்றான கொழும்பு றோயல் கல்லூரியில் ரணில் மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் கல்வி கற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒரே நாளில் றோயல் கல்லூரியில் தரம் ஒன்றுக்காக அனுமதி பெற்றுக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ரணில் சிறு வயதில் கிரிக்கட் மற்றும் ரகர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார் என தினேஷ் குணவர்தன ஊடகங்களிடம் தமது பள்ளிக் காலம் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தார்.
அரசியல் கட்சி கொள்கை என்பனவற்றில் இரு வேறு பாசறைகளில் நிலைகொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கவும், தினேஷ் குணவர்தனவும் இன்று ஒரே அரசாங்கத்தின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இரு தோழர்களில் பியகம தொகுதியில் போட்டியிட்ட ரணில் வெற்றியிட்டிய அதேவேளை அவிசவளை தொகுதியில் போட்டியிட்ட தினேஷ் தோல்வியைத் தழுவியிருந்தார்.
பின்னர் 1983ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தினேஷ் குணவர்தன மஹரகம தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் ரணில் மற்றும் தினேஷ் குணவர்தனவின் மற்றுமொரு வகுப்புத் தோழரான அமரர் அனுர பண்டாரநாயக்க சபாநாயகராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.