காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்த சட்டத்தரணிகள் சங்கம்!

0
811

காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, தாக்குதல் நடத்தியவர்கள் மாத்திரம் இதுவரை கைது செய்யப்படாமை கண்டனத்திற்குரிய விடயமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் நிறைவேற்று குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பகுதிகளில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக நேற்றைய தினம் வரையில் 230பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எந்தவொரு பகுதியிலும், வன்முறைச் சம்பவங்கள் பதிவாவதை சட்டத்தரணிகள் என்ற வகையில் ஏற்றுக்கொள்வதில்லை. அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும். வன்முறைகளில் ஈடுபட்டிருந்தவர்கள், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரில் அலரிமாளிகைக்கு வந்திருந்தனர்.

இதில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்புள்ளது. எனவே, காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே குறிப்பிட்டுள்ளார்.