உக்ரைன் – ரஷ்யா போரால் வறுமையில் தள்ளப்படும் உலகமக்கள்

0
548

உக்ரைன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. தலைவர் கவலை தெரிவித்து உள்ளார்.

உக்ரைன் நாடு மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி படையெடுத்தது. ரஷ்யா நடத்தி வரும் இந்த போர் இன்று 54வது நாளாக நீடித்து வருகிறது.

போரில் இரு நாட்டு வீரர்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர். பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். போரை நிறுத்த ஐ.நா. அமைப்பு, போப் பிரான்சிஸ் (Pope Francis), அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க போரானது தொடர்ந்து வருகிறது. போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆயுத உதவியும் செய்து வருகின்றன.

இந்த போரால் மனித இனத்தில் 5ல் ஒரு பங்கு சதவீதத்தினருக்கும் கூடுதலானோர் வறுமை, பசியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் (Antonio Cutters) கவலை தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி செக் குடியரசு நாட்டின் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், உக்ரைனில் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள சோகங்களை நாம் அனைவரும் பார்க்கிறோம். ஆனால் போரால், அந்நாட்டு எல்லைகளை கடந்து, வளர்ந்து வரும் நாடுகள் மீதும் மவுன தாக்குதல் தொடுக்கப்பட்டு உள்ளது.

Image result for ஐ. நா பொதுச் சபை

இதனால், மனித இனத்தில் 5ல் ஒரு பங்குக்கும் மேலான மக்கள் வறுமை மற்றும் பசி, பட்டினி நிலைக்கு தள்ளப்பட கூடும். பல தசாப்தங்களாக நாம் காணாத நிலையை எட்ட கூடும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, உலக அளவில், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் பார்லியை 30 சதவீதம் உற்பத்தி செய்கின்றன. 5ல் ஒரு பங்கு சோளமும், பாதிக்கும் மேலாக சூரியகாந்தி எண்ணெயும் உற்பத்தி செய்யப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

குறைந்த அளவில் வளர்ச்சியடைந்த 45 நாடுகள், மூன்றில் ஒரு பங்கு கோதுமையை ரஷ்யா மற்றும் உக்ரைனிடம் இருந்து இறக்குமதி செய்கின்றன. இந்த போரால், தானிய ஏற்றுமதி தடைப்பட்டு உள்ளது. வினியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. நடப்பு 2022ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து, கோதுமை மற்றும் சோளம் ஆகியவற்றின் விலை 30 சதவீதம் உயர்ந்து விட்டது.

கச்சா எண்ணெய் விலையும் 60 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்வடைந்து உள்ளது. எரிவாயு மற்றும் உரம் ஆகியவை இருமடங்கிற்கும் கூடுதலாக விலையேற்றம் அடைந்து உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.