அமெரிக்க, ஐரோப்பிய சிறார்களில் பரவும் மர்ம நோய்: வெளியான பின்னணி

0
449

அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவின் பல நாடுகளில் குழந்தைகளுக்கு கடுமையான கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் தரப்பு விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் திடீரென்று சிறார்களுக்கு மர்மமான முறையில் கல்லீரல் நோய் கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மட்டும் இதுவரை 74 சிறார்கள் கல்லீரல் நோய் காரணமாக மருத்துவமனையை நாடியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் இதே போன்ற மூன்று சிறார்களுக்கும் அயர்லாந்தில் சில சிறார்களுக்கும் மர்மமான இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இதேபோன்ற பாதிப்புடன் ஒன்பது சிறார்களை தாங்கள் ஆராய்ந்து வருவதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அனைவரும் அலபாமா பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் வேறு பகுதிகளில் இதுபோன்ற கல்லீரல் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட சிறார்கள் 1ல் இருந்து 6 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், இருவருக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் பாதிப்புக்கு உள்ளான சிறார்களும் 6 வயதுக்கு உட்பட்டவர்களே என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியாவில் கல்லீரல் பாதிப்புக்கு இலக்கான சிறார்களில் 6 பேர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென்று பரவும் கல்லீரல் பாதிப்பு தொடர்பில் மர்மம் நீடித்து வந்தாலும், இது பொதுவாக ஜலதோஷத்துடன் தொடர்புடைய ஒரு வகையான வைரஸ் பாதிப்பாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.