பொருளாதார நெருக்கடி காரணமாகத் தமிழகத்துக்கு அகதிகளாகச் செல்லும் இலங்கை மக்கள்!

0
532

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாகத் தமிழகத்துக்கு அகதிகளாகச் செல்பவர்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப்பொருள்கள் 10 மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து இலங்கை மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தமிழர்கள் 16 போ் கடந்த 22 ஆம் திகதி அகதிகளாகத் தனுஷ்கோடி சென்றனர்.

அவர்கள் மண்டபம் முகாமில் உள்ள தனிமைப்படுத்தப்படும் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள், தமிழகம் செல்லத் தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கும் வகையில் மண்டபம் மறுவாழ்வு முகாமில் உள்ள 147 வீடுகளின் மறு சீரமைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த வீடுகளில் மின் இணைப்பு, குடிநீர், கழிவறை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் தனித்துறை ஆட்சியர் சிவகுமாரி, ராமநாதபுரம் வட்டாச்சியா் ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் ரவி, மண்டபம் பேரூராட்சி தலைவர் டி.ராஜா, கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் பணிகளைப் பார்வையிட்டுத் துரிதப்படுத்தி வருகின்றனர்.