மார்ச் 22 முதல் 25 வரை பாராளுமன்றம் கூடும்

0
366

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டை எதிர்வரும் 22ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள  (16) அன்று முற்பகல் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

இதற்கமைய திருத்தங்களுடன் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படவிருப்பதாக ரோஹனதீர தெரிவித்தார்.

அன்றையதினம் பாராளுமன்றம் மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன் மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பயங்கரவாத தடுப்பு( தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடைபெறும்.

மார்ச் 23ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் 4.30 மணி வரை காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மார்ச் 24ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கும், துருக்கி குடியரசின் அரசாங்கத்துக்கும் இடையில் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரிவிதிப்பை நீக்குவதற்கும், வரி செலுத்தாது தட்டிக்கழித்தல் மற்றும் தவிர்ப்பு என்பவற்றைத் தடுப்பதற்குமாக 2022 ஜனவரி 28ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ் அன்றையதினம் அங்கீகரிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றம் மார்ச் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரைக் கூடவிருப்பதுடன், 25ஆம் திகதி தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் மு.ப 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 25ஆம் திகதி தவிர ஏனைய நாட்களில் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் முறையே ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான  பிரேரணை மீதான விவாதத்தையும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 25ஆம் திகதி மு.ப 10.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அனுதாபப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. இதன்படி, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பெற்றி வீரக்கோன், கௌரவ தங்கேஸ்வரி கதிரமன், கௌரவ. எம்.எஸ்.செல்லசாமி, கௌரவ ஜெஸ்டின் கலப்பதி ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அன்றைய தினம் வாய்மூல விடைக்கான கேள்விகள், 27 (2) நிலையியற் கட்டளையின் கீழ் கட்சித் தலைவர்களால் கேட்கப்படும் கேள்விகள், சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள் மற்றும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான  பிரேரணை என்பவற்றுக்கு நேரம் ஒதுக்கப்படாது.