சுவிட்சர்லாந்துக்கு நாடுகடத்தவுள்ள இலங்கை தம்பதியினர்!

0
397

சுவிட்சர்லாந்து செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கை தம்பதியினரை சுவிட்சர்லாந்துக்கு நாடுகடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் அரசியல் கட்சி ஒன்றுடன் தொடர்புடைய ஒரு தம்பதியர் மற்றொரு அரசியல் கட்சியினரிடமிருந்து அச்சுறுத்தல் வந்ததால் படகு ஒன்றில் இந்தியா வந்தடைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து சுவிட்சர்லாந்து செல்வதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் இந்தியா வந்தடைந்த தம்பதியர், டெல்லியிலுள்ள சுவிஸ் தூதரகத்துக்குச் சென்று விசா பெற்றுள்ளனர்.

அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்காக exit permit பெறுவதற்காக புதுடில்லியிலுள்ள வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தை அணுகியபோது, சென்னையிலுள்ள அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை பொலிஸாரை அவர்கள் அணுகிய நிலையில், அவர்கள் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், திருச்சியிலுள்ள சிறப்பு முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய பிள்ளைகள் இந்தியாவிலிருக்கும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவர்களுக்கு நான்கு நாட்கள் சிறைத்தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாங்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்படலாம் என்ற அச்சத்தில், அவர்கள் தங்களை சுவிட்சர்லாந்துக்குச் செல்ல அனுமதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையை அணுகியுள்ளனர்.இதன்படி, தம்பதியரையும் அவர்களது பிள்ளைகளையும், அவர்களது விசா காலாவதியாகும் முன் சுவிட்சர்லாந்துக்கு நாடுகடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கும்படி வெளியுறவு அமைச்சகத்துக்கும், சென்னை வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்திற்கும், நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.