இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர்களை கடனை வழங்கும் இந்தியா

0
421

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் செய்தியை ஒன்றை பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார பங்களிப்பு தொடர்பில் பலன் தரக் கூடிய பேச்சுவார்த்தையை நடத்தியதாக கூறியுள்ளார்.

இலங்கையர்களின் தேவைகளுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உணவு, மருந்து, எரிபொருள் போன்ற அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்தல், இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கான கைமாற்று கடனை பெறுவது, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை நவீனமயப்படுத்தும் திட்டம், இலங்கையில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற விடயங்கள் இதன் போது பேசப்பட்டுள்ளன.

அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய ஒரு பில்லியன் டொலர்களையும் எரிபொருளை இறக்குமதி செய்ய 500 மில்லியன் டொலர்கள் மற்றும் மேலும் 400 மில்லியன் டொலர்களுடன் இந்தியா, இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.