லொட்டரியில் பரிசாக கிடைத்த பெருந்தொகை: ஊரடங்கில் பிரித்தானிய தம்பதியினரின் நெகிழ்ச்சி செயல்

0
555

லொட்டரியில் பெருந்தொகை பரிசாக கிடைத்த நிலையில், பிரித்தானிய தம்பதி ஒன்று ஊரடங்கு காலத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வந்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

பிரித்தானியாவின் கோவென்ட்ரி பகுதியை சேர்ந்த பில் மற்றும் கேத் முல்லர்கி தம்பதிகளே, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆதரவற்றவர்களுக்கு உதவும் வகையில் உணவு அளித்தவர்கள்.

இதற்காகவே, சமையல் கலைஞர் ஒருவரை ஏற்பாடு செய்து, சீக்கிய சமூகத்தினர் உணவு வழங்கும் அதேப் போன்று இவர்களும் ஆதரவற்றவர்களுக்கு உணவு தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளனர்.

கோவென்ட்ரி பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு தம்மால் இயன்ற உதவியை இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் செய்ய வேண்டும் என்பதை தமது மனைவியுடன் கலந்தாலோசித்ததாக கூறும் பில்,

அவருக்கும் அதில் உடன்பாடு இருந்ததை அறிந்து, இருவரும் சமையல் வேலையில் உடனடியாக களமிறங்கியதாக கூறியுள்ளார்.

ஆனால், ஒரு சமையல் கலைஞரால் உணவு தயாரித்தால், அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்த தம்பதி, உடனடியாக சமையல் கலைஞர் ஒருவரை தேடியுள்ளது.

அதற்காக வார்விக் பல்கலைக்கழக செஃப் ஜிம் ஈவ்ஸ் என்பவரை பணியில் அமர்த்தியுள்ளனர்.

கடந்த வாரம் தொடங்கி, தற்போது கோவென்ட்ரி பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கும் முதியவர்களுக்கும் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

கடந்த 2017-ல் பில் மற்றும் கேத் முல்லர்கி தம்பதிக்கு லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது.

இதனையடுத்தே தங்களால் இயன்ற உதவியை ஆதரவற்ற மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானதாக பில் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, 2019 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 100 முதியவர்களுக்கு அறுசுவையான விருந்து படைத்ததை தங்களால் இயன்ற சிறு உதவி என்றே பில் தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.