ட்ரம்புக்கு கொடுக்கப்பட்ட அதே கொரோனா சிகிச்சையை பின்பற்ற ஜேர்மனி முடிவு!

0
553

கொரோனா பாதித்த அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்புக்கு சிகிச்சையளிக்கப்பட்ட அதே முறை சிகிச்சையை பயன்படுத்த ஜேர்மனி முடிவு செய்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

அப்போது அவருக்கு ஆன்டிபாடி சிகிச்சை ஒன்று அளிக்கப்பட்டது. குறுகிய காலம் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப், குணமடைந்த பின் அந்த மருந்து பிரமாதமாக வேலை செய்ததாக தெரிவித்திருந்தார்.

அந்த சிகிச்சையில், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இரண்டு ஆன்டிபாடிகளை சேர்த்து ட்ரம்புக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் மனித உடலுக்கும் நுழைய தன் உடலின் எந்த உறுப்பை பயன்படுத்துமோ, அந்த உறுப்பையே இந்த ஆன்டிபாடிகள் கட்டிப்போட்டுவிடும்.

கிட்டத்தட்ட பூட்டு ஒன்றிற்கான சாவியை சேதப்படுத்திவிட்டால், அந்த சாவியை பயன்படுத்தி எப்படி அந்த பூட்டை திறக்கமுடியாதோ, அதே போன்ற ஒரு முறைமையைப் பயன்படுத்தித்தான் இந்த ஆன்டிபாடி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, இதே சிகிச்சை முறையை பயன்படுத்துவது என ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn தெரிவித்துள்ளார்.

ஒரு டோஸுக்கு 2,000 யூரோக்கள் கட்டணம் வீதம், 400 மில்லியன் யூரோக்கள் செலவில், அந்த மருந்தின் 200,000 டோஸ்கள் வாங்கப்பட்டுள்ளதாக Spahn தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் பலவும் எப்படியாவது இந்த கொரோனா அரக்கனை துரத்திவிடுவது என கங்கணம் கட்டிக்கொண்டு என்னென்ன சிகிச்சை முறைகளை கொரோனாவுக்கெதிராக பயன்படுத்தமுடியுமோ, அத்தனையையும் முயற்சி செய்துவருகின்றன, விரைவில் நல்ல செய்தி கிடைக்கட்டும்!