பிரித்தானியவின் மோசமான இந்த நிலைக்கு காரணமே பிரதமர் போரிஸ் ஜோன்சன்: கொந்தளிக்கும் பெருவாரியான மக்கள்

0
576

பிரித்தானியாவில் கொரோன பரவல் உச்சம் தொட முக்கிய காரணம் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் மெத்தனப்போக்கு தான் என பெருவாரியான மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

போரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசின் கொரோனா செயல்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய மக்களில் நான்கில் ஒருவர், நாட்டின் எல்லைகளை மூட தாமதப்படுத்திய போரிஸ் ஜோன்சன் நிர்வாகமே இந்த மோசமான நிலைக்கு காரணம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, வெளிநாடு சென்ற பயணிகள் பிரித்தானியாவுக்கு திரும்புகையில், அவர்களை விமான நிலைய ஹொட்டல்களில் தனிமைப்படுத்த அமைச்சரவை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி போரிஸ் ஜோன்சன் கட்சியின் ஆதரவாளர்களில் 83% பேர் வெளிநாட்டுப்பயணிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை தேவை என வாக்களித்துள்ளனர்.

இதேவேளை தொழிலாளர் கட்சி ஆதரவாளர்கள் 92% பேர் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

உருமாறிய வீரியம் மிக்க கொரோனா பரவல் கண்டறியப்பட்டதும், எல்லைகளை மூடுவது தொடர்பில் ஜோன்சன் நிர்வாகம் மெத்தனமாக இருந்ததுடன், மிகவும் தாமதமாக முடிவெடுத்துள்ளது என்றே பெருவாரியான மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில், எல்லைகளை மூடுவதுடன் கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் செவ்வாய்க்கிழமை பிரதமர் போரிஸ் ஜோன்சன் தமது கருத்துகளை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று, பிரித்தானியாவில் 77 பேர்களில் கண்டறியப்பட்டுள்ளது எனவும்,

பிரேசிலில் உருமாற்றம் கண்ட கொரோனா 11 பேர்களிடம் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.