கோட்டாபயவின் விசாரணைக்குழுவை கண்டு சர்வதேசம் ஏமாறக்கூடாது

0
748

சர்வதேச விசாரணையை தவிர்க்கும் நோக்கிலேயே கோட்டாபய உள்ளக விசாரணைக்குழுவை அமைத்துள்ளார்.

எனவே இந்த விசாரணைக்குழுவைக் கண்டு சர்வதேசம் ஏமாறக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

“சர்வதேச விசாரணையை உடனடியாக தவிர்க்கும் நோக்கிலேயே கோட்டாபய ராஜபக்ச ஆணைக்குழுவை அமைத்துள்ளார்.சர்வதேச அளவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அழுத்தங்கள் ஏற்படும் போதெல்லாம் இப்படியான விசாரணைக் குழுக்களை அமைப்பது இலங்கைக்கு வாடிக்கையாகவுள்ளது.“

அந்தவகையில் நீண்ட காலம் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கையில் குறைந்தது 12க்கு மேற்பட்ட உள்ளக விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன, ஆனால் ஒன்றின் மூலமும் எவரும் நீதியின் முன்நிறுத்தப்படவில்லை அல்லது காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க அவர்களின் குடும்பங்களுக்கு உதவவில்லை .

இலங்கை அரசால் அமைக்கப்பட்ட உள்நாட்டு விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் பெரும்பாலும் வெளியிடப்படவில்லை, மேலும் அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அமல்படுத்தப்படவுமில்லை .

“சர்வதேசப் பார்வையாளர்கள் மற்றும் ஐநா வல்லுநர்களால் இலங்கையின் சட்ட வழிமுறை கட்டமைப்புகளில் ஆழமான பிரச்சனைகள் உள்ளன என்பது தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது“.

கடந்த 2012ல் ஐ நா மனித உரிமைகள் கவுன்சில் தான் முன்னர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இயற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகளை நிறைவேற்றும்படி இலங்கை அரசைக் கோரியது. ஆனால் அது நடைபெறாத நிலையில், போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவை என்பது உணரப்பட்டது.

அதே போல் 2015ல் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் ஏகமனதான தீர்மானமொன்றில் இலங்கை இணைந்து உண்மை, நீதி, இழப்பீடு குறித்து ஆராயவும் மற்றும் அது போன்ற குற்றங்கள் மீண்டும் இடம்பெறாது என்பதையும் உறுதியளித்தது. அதேவேளை பொறுப்புக் கூறல் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், குற்றஞ்சாட்டும் வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணி ஆகியோரை உள்வாங்கவும் இலங்கை உடன்பட்டது.

அந்த வழிமுறை மந்தமாக முன்னேறினாலும் அதனால் ஊக்கமடைந்த ஐ நா மனித உரிமைகள் கவுன்சில் அதற்கான காலகட்டத்தை நீட்டித்தது என்றாலும் நவம்பர் 2019ல் ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை அந்தத் தீர்மானத்திலிருந்து விலக்கிக் கொண்டு அதனால் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் ஒழித்துக் கட்டினார் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.