கடந்த 21 ஆம் திகதி இரவு, டிமோனா பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த 4 இலங்கையர்களும், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்த நேரத்தில், குறித்த நான்கு நபர்களும் திறந்தவெளியில் இருந்துள்ளனர். ஏவுகணை வெடிப்பின் அதிர்வினால் சிதறிய கண்ணாடித் துண்டுகள் அவர்களின் தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் பட்டதில் அவர்கள் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் (IDF) வழங்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றத் தவறியதே இந்த விபத்திற்குக் காரணம் என்று தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஏவுகணைத் தாக்குதலுக்கு சுமார் மூன்று நிமிடங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்படுகின்றன. அந்தச் சத்தம் கேட்டவுடன் இலங்கையர்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் அந்தந்த நாட்டு பாதுகாப்புத் துறையினரின் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுவது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



