ஈரான் தமது தாக்குதல் கொள்கையில் புதிய வியூகத்தை வகுத்துள்ளதாக தெஹ்ரானின் காதம் அல்-அன்பியா இராணுவ தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார். அதற்கமைய பரஸ்பர தாக்குதல் கொள்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றும் இனிமேல் தாக்குதலுக்குத் தாக்குதல் என்ற புதிய கொள்கையைப் ஈரான் பின்பற்றப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு லீற்றர் எண்ணெயைக் கூட கொண்டு செல்ல ஈரான் அனுமதிக்காது. அவர்களை நோக்கிச் செல்லும் எந்தவொரு கப்பலும் அல்லது தாங்கியும் ஈரானின் இலக்காக அமையும்.
எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 200 அமெரிக்க டொலர் வரை உயர்வதற்குத் தயாராக இருங்கள். ஏனெனில் எண்ணெய் விலை பிராந்திய பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது. அந்தப் பாதுகாப்பை நீங்கள்தான் சீர்குலைத்துள்ளீர்கள் என அவர் எச்சரித்துள்ளார்.
இது இப்படி இருக்க ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் உலகப் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் இதனை உடனடியாகத் திறக்காவிடில் நீண்டகால உலகளாவிய நெருக்கடி உருவாகும் என கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் கிறிஸ்டியன் பர்கர் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கத் தவறினால் ஐரோப்பா மிக மோசமான எரிசக்தி விநியோக நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அத்தோடு நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு தமது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அணுசக்தி தொழில்நுட்பத்தில் மீண்டும் முதலீடு செய்வது குறித்து சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு உள்ள ஒரே நடைமுறைச் சாத்தியமான தீர்வு ஈரான் இந்த நீரிணையை மீண்டும் திறப்பது மட்டுமே என வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது எவ்வளவு கடினம் என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் வேகமான தாக்குதல் படகுகள் மூலம் எழும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பெருமளவிலான கப்பல்களைப் பாதுகாப்பது சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நீரிணை இன்று திறக்கப்பட்டாலும் கூட ஏற்கனவே அங்கு உருவாகியுள்ள பாரிய கப்பல் போக்குவரத்து நெரிசல் காரணமாக விநியோகச் சங்கிலி இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் வெவ்வேறு இடங்களில் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்து கொடியிடப்பட்ட மயுரி நாரி கப்பல், ஜப்பான் கொடியிடப்பட்ட ஒன் மெஜஸ்டி கப்பல், மார்ஷல் தீவுகள் கொடியிடப்பட்ட ஸ்டார் க்வினெத் கப்பல் ஆகியவையே தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் எந்தச் சூழலில் அல்லது யாரால் நடத்தப்பட்டன என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.



