இறுதிச்சடங்கு முடிந்த நிலையில் உயிருடன் வந்த தந்தை!

0
29

இந்தியாவில் பொள்ளாச்சி அருகே இறந்துவிட்டதாக நினைத்து ஒருவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்து முடித்த நிலையில் அந்த நபர் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெத்தநாயக்கனூரைச் சேர்ந்த மருதமுத்து என்பவர் காணாமல் போன நிலையில் கோட்டூர் காவல்துறையினர் காட்டிய புகைப்படத்தை வைத்து அவர் இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினர் உடலைப் பெற்றுச் சென்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத உடலமாக இருந்த அந்த உடலைத் தங்கள் தந்தை என அடையாளம் காட்டிய மகன்கள், வீட்டிற்கு எடுத்து வந்து முறைப்படி இறுதிச்சடங்குகளையும் செய்துள்ளனர். இறுதிச்சடங்குகள் முடிந்த நிலையில் மருதமுத்து சமத்தூர் அருகே உயிருடன் நடந்து வருவதை உறவினர் ஒருவர் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். தனது தந்தை கண் முன்னே உயிருடன் நிற்பதைக் கண்டு குடும்பத்தினர் உறைந்து போயினர். உருவ ஒற்றுமை மற்றும் முகம் மாறியிருந்ததால் ஏற்பட்ட குழப்பமே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் சாலையோரம் மயங்கிக் கிடந்த மருதமுத்து சிகிச்சை பெற்று வீடு திரும்பாமல் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. தவறாகப் பெற்று வரப்பட்ட உடலம் தற்போது கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

“மகன்களே அடையாளம் காட்டியதால் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதில் உள்நோக்கம் இல்லாததால் சட்ட நடவடிக்கை தேவையில்லை” என கோட்டூர் காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். அந்த அடையாளம் தெரியாத உடலம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.