இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஐரிஸ் புசேஹெரின் என்ற ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில் 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். உரிய நடைமுறைகளை பின்பற்றி ஏனையவர்களும் துறைமுகத்துக்கு அழைத்துவரப்படுவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஈரானியர்களை வெலிசர கடற்படை தளத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார். அங்கு அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஈரானின் 02 ஆவது குறித்த கப்பலை திருகோணமலை துறைமுகத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த ஈரானிய கப்பலில் 208 பேர் பயணித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் அழைத்து வரப்படுவோரில் 53 அதிகாரிகளும், 84 கேடட் அதிகாரிகளும், 48 சிரேஷ்ட மாலுமிகளும், 23 மாலுமிகளும் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கடல்சார் நிலைமைகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய பெருங்கடலில், அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் தாக்கி, மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க் கப்பல் தொடர்பான தேடுதல் நடவடிக்கையில் இந்தியாவும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



