பாதாள உலகக் குழு மற்றும் வெள்ளைவான் பிதாக்கள் வாயை மூடி இருக்கவும் – தேசிய மக்கள் சக்தி

0
29

நாட்டில் கடந்த காலங்களில் பாதாள உலகக் குழுக்களையும் வன்முறையாளர்களையும் வளர்த்துவிட்டவர்களே இன்று அரசின் மீது சேறு பூச முற்படுவதாக ஆளும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் கூறுகையில்,

நாட்டைப் பாதாள உலகக் கூடாரமாக மாற்றியவர்கள் யார் என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். வெள்ளை வான் கலாசாரத்தையும், பகிரங்கப் படுகொலைகளையும் சட்டபூர்வமாக்கிய ஒரு அரசியல் குழுவின் பிரதிநிதியாக இருந்துகொண்டு சாகர காரியவசம் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையானது என்றார்.

ஆனால் தற்போதைய அரசு பொலிஸ் திணைக்களத்துக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அதனாலேயே கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கினால் மறைக்கப்பட்ட பல குற்றச் செயல்கள் இன்று வெளிச்சத்துக்கு வருவதுடன் குற்றவாளிகள் தராதரம் பாராது கைது செய்யப்படுகின்றனர்.

இந்தச் சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் திசை திருப்பவே தேசிய மக்கள் சக்தி அரசு பாதாள உலகத்துடன் இணைந்துள்ளது என்ற அப்பட்டமான பொய்யை மொட்டுக் கட்சியினர் பரப்புகின்றனர். சட்டத்தரணியும் அவரின் மனைவியும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

முந்தைய ஆட்சியில் நீதியைத் தடுத்ததைப் போலன்றி எமது ஆட்சியில் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

தேர்தல் களத்தில் மக்கள் தங்களை முற்றாக நிராகரித்துவிட்டனர் என்பதை உணர்ந்துள்ள மொட்டுக் கட்சி இவ்வாறான அச்சமூட்டும் கதைகள் மூலம் மீண்டும் அரசியல் உயிர் பெற முயற்சிக்கின்றது. பிரதமரின் கருத்துக்களைத் திரிபுபடுத்தி இராணுவத்தினரைத் தூண்டிவிடும் இவர்களின் இழிவான அரசியல் இனிமேலும் மக்கள் மத்தியில் எடுபடாது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது மேலும் தெரிவித்தார்.