பங்களாதேஷ தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரகுமான் புதிய பிரதம ராக பதவியேற்க உள்ளார். ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்ட நிலையில் மற்றொரு முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவின் வங்காளதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்றது. ஷேக் ஹசீனா அரசு கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக கவிழ்ந்தது.
இதைத்தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.அங்கு புதிய அரசை தேர்ந்தெடுக்க கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் மொத்தமுள்ள 297 இடங்களில் 207 தொகுதிகளை அந்த பிரதமரான கலீதா ஜியாவின் வங்காளதேச தேசியவாத கட்சி கைப்பற்றியது.
வலதுசாரி கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 68 இடங்களை பெற்றது. நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, பங்களாதேஷ தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரகுமான் (வயது 60) புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.
அவரது பதவியேற்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை 4 மணிக்கு தலைநகர் டாக்காவில் நடக்கிறது. பங்களாதேஷ் நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தாரிக் ரகுமானுக்கு பங்களாதேஷ ஜனாதிபதி முகமது சகாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அத்துடன் புதிய அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.



