மனைவியின் உயிரிழப்புக்கு நானே காரணம் ஆனால் அது கொலை அல்ல; அவுஸ்திரேலியாவில் கதறும் இந்தியர்!

0
25

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வசித்து வந்த 42 வயது இந்திய வம்சாவளி நபர் விக்ராந்த் தாக்கூர், தனது 36 வயது மனைவி சுப்ரியா தாக்கூரை கொலை செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இது திட்டமிட்ட ‘கொலை’ அல்ல என்றும் எதிர்பாராத விதமாக நடந்த மனித தவறு என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி நார்த்பீல்ட் பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தில் இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் சுயநினைவின்றி இருந்த சுப்ரியாவுக்கு முதலுதவி அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

சுப்ரியா தாக்கூர் ஒரு செவிலியராக பணியாற்றும் கனவோடு ஆஸ்திரேலியா சென்றவர். அவரது திடீர் மறைவு அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டுக் கொலை செய்வதற்கும் தற்செயலாக ஒரு மரணம் நிகழுவதற்கும் இடையிலான சட்ட நுணுக்கங்களை முன்வைத்து இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேசமயம் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள விக்ராந்த் மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சுப்ரியாவின் குடும்பத்திற்கு உதவ அவரது நண்பர்கள் நிதி திரட்டி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.