கள்ளக்காதல் கொடூரம்; காதலியை துண்டு துண்டாக வெட்டி எரித்த காதலன்

0
26

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சி மாவட்டம் ஐ.டி.ஐ. பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பிரீத்தி என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகிய நிலையில் 62 வயதுடைய ராம் சிங் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரான ராம் சிங்கிற்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் லேகர் கோன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பிரீத்தியுடன் அடிக்கடி தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் ராம் சிங்கிடம் பிரீத்தி அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராம் சிங் கடந்த வாரம் பிரீத்தியை அடித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு பெரிய இரும்புப் பெட்டிக்குள் வைத்து, அதன் மீது விறகுகளை குவித்து தீ வைத்து எரித்துள்ளார்.

இதில் உடல் பாகங்கள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியுள்ளன. உடல் பாகங்களை அப்புறப்படுத்தும் நோக்கில் ராம் சிங் ஒரு லோடு ஆட்டோவை வரவழைத்து, பூட்டிய இரும்புப் பெட்டியை அதில் ஏற்றி சிப்ரி பஜார் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கிடையில் இரும்புப் பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த ஆட்டோ டிரைவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ராம் சிங் அங்கிருந்து தப்பியோடியதை கண்டனர். அவர் விட்டுச் சென்ற இரும்புப் பெட்டியை கைப்பற்றிய பொலிஸார் அதைத் திறந்து பார்த்தபோது சாம்பலும் சில எலும்புத் துண்டுகளும் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ராம் சிங்கின் மனைவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கொலையில் ராம் சிங்கின் மகனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தலைமறைவாக உள்ள ராம் சிங்கை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.