அமெரிக்காவிற்கு திருப்பி அடிக்கும் சீனா; 20 நிறுவனங்களுக்கு தடை!

0
30

அமெரிக்காவின் 20 நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா, தாய்வானுக்கு சுமார் 11 பில்லியன் டொலர் மதிப்பிலான பாரிய ஆயுத விற்பனைத் தொகுப்பை அறிவித்ததற்கு பதிலடியாக சீனா இந்தத் தடையை விதித்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம், தாய்வானுக்கு ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தனது இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கிறது.

 சீன வெளியுறவு அமைச்சு நேற்று (27) அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது போயிங் (Boeing – St. Louis branch), நோர்த்ரோப் க்ரம்மன் (Northrop Grumman) உள்ளிட்ட 20 முக்கிய பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய 10 உயர்மட்ட அதிகாரிகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்குச் சீனாவில் ஏதேனும் சொத்துக்கள் இருந்தால் அவை முடக்கப்படும்.

சீன நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்த அமெரிக்க நிறுவனங்களுடன் எந்தவிதமான வர்த்தகத் தொடர்புகளையும் வைத்துக்கொள்ள முடியாது. இதேவேளை தடை விதிக்கப்பட்ட 10 அதிகாரிகளும் சீனா, ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைகள் பெரும்பாலும் அடையாள ரீதியானவை என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தடை செய்யப்பட்ட அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களுக்குச் சீனாவில் நேரடி வணிகத் தொடர்புகள் மிகக் குறைவாகவே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.