எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இந்தப் பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள்இணைய ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஏனைய கட்சிகளின் பங்கேற்பு குறித்து அந்தந்த கட்சிகளின் உள் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார். இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் கட்சித் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்றன.
மேலும், கொழும்பு மலர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி அலுவலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினருடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
பல எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இந்த கலந்துரையாடலில் இணைந்துள்ளன, மேலும் பல கட்சிகள் பேரணியில் சேர இணக்கம் வெளியிட்டுள்ளன. மற்ற கட்சிகளின் பங்கேற்பு அவர்களின் உள்ளக கலந்துரையடல் முடிந்த பிறகு அறிவிக்கப்படும்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தும் நோக்கில் நடைபெறும் இந்தப் பேரணியில் அரசாங்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட பலர் இணைவார்கள் என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.



