‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்

0
24

தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ”பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது விசேட சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

2025 செப்டம்பர் 01 ஆம் திகதி பிரான்சிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய சூரன், கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஜேர்மனி, துருக்கி, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழியாகப் பயணம் செய்து கடந்த வியாழக்கிழமை (23) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

அவரது முயற்சியினை பாராட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன் இலங்கை இராணுவத்தினரால் அதில் அவர் வரவேற்கப்பட்டார்.

பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, சேர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா, கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஊடாக இவர் பயணம் செய்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர் யாழ்ப்பாணத்தின் விசேட கலாசார முக்கியத்துவம், மரபுகளை உலகிற்கு வெளிப்படுத்துவதும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தை ஒரு அழகான இடமாக ஊக்குவிப்பதும், நல்லிணக்கத்தை வளர்ப்பதும் சர்வதேச சமூகங்களுடனான சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதும் தனது நோக்கம் என்று வலியுறுத்தினார்.

இதேவேளை உலகளாவிய பயணம் தொடர்பான லொன்லி பிளானட் (Lonely Planet) சஞ்சிகையானது 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ரீதியில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.