ஹிஸ்புல்லாஹ் தங்க மோசடியில் பாதிக்கப்பட்டதாக வந்த செய்தி: ஊடகப் பிரிவு மறுப்பு

0
20

தங்க வியாபாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக கானா ஊடகங்களில் வெளிவந்ததாகக் கூறப்பட்டு பல ஊடகங்களில் வெளியான செய்தியை அவரது ஊடகப் பிரிவு முற்றிலும் மறுத்துள்ளது. அந்தச் செய்தியில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மைச் சம்பவம் குறித்து பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தார்.

அங்கே சிலர் மோசடி செய்ய முயன்றதை அறிந்த அவர் உடனடியாக இது குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து ஏமாற்ற முயன்ற 11 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தவிர கலாநிதி ஹிஸ்புல்லாவுக்கும் இந்த மோசடி விவகாரத்திற்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.