அரசாங்க வசமான கதிர்காமம் மெனிக் நதி வீடு: கோட்டாபயவின் பதிவு

0
36

கதிர்காமத்தில் மெனிக் நதிக்கு அருகில் உள்ள வீடு தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இடுவதன் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் பகுதியில் எந்தவொரு கட்டிடத்தையும் அமைக்கவோ அல்லது பராமரிக்கவோ தனக்கு எந்த காரணமோ அல்லது விருப்பமோ இருந்ததில்லை எனவும் அவர் குறித்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவரது பதிவில் “கதிர்காமத்தில் மெனிக் நதிக்கு அருகில் வேறொருவர் கட்டிய வீடு எனக்கு சொந்தமானது என தவறாகக் கூறும் ஒரு செய்தி ஊடகங்களில் வெளியாகி வருவதை அவதானித்தேன்.

நேற்று (13.10.2025) சில தொலைக்காட்சி சனல்களில் வெளியிடப்பட்ட செய்தியில் அந்தக் கட்டிடத்தைக் குறிப்பிடும்போது எனது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி கட்டிடத்தின் உரிமை தொடர்பில் கடந்த காலத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை தொடர்பாக நானும் ஒரு அறிக்கையை அளித்திருந்தேன்.

அந்தக் கட்டிடத்திற்கு மின்சார இணைப்பு பெறுவதற்காக “ஜி. ராஜபக்ச” என்ற ஒரு நபரின் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மாத்திரமே இவ்விடயம் தொடர்பில் என்னிடம் விசாரணை மேற்கொள்ள காரணம் விண்ணப்பத்தில் முறையான ஒரு கையொப்பம் இல்லை. கையொப்பம் இருக்க வேண்டிய இடத்தில் தெளிவற்ற ஒரு எழுத்து இருந்தது.

இந்தப் போலியான செய்தி அவ்வப்போது வெளிவருவதால் அனைவரின் அறிதலுக்காகவும் கதிர்காமத்தில் மெனிக் நதிக்கு அருகில் உள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல என்பதை நான் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.

கதிர்காமம் பகுதியில் எந்தவொரு கட்டிடத்தையும் கட்டவோ அல்லது பராமரிக்கவோ எனக்கு எந்த காரணமோ விருப்பமோ இருந்ததில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

கதிர்காமம் மெனிக் நதிக்கு அருகில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வைத்திருந்த வீடொன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று (13) நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்தச் சொத்தை அரசாங்கச் சொத்தாக கையகப்படுத்தியிருந்தது.

இவ்விடயம் தொடர்பிலான நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து மொனராகலை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் அப்துல் ஜப்பார் சம்பவ இடத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட கட்டிடத்தை பொறுப்பேற்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.