2025 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய நாவலாசிரியரும் திரைக்கதையாசிரியருமான லாஸ்லோ க்ராஸ்னஹோர்கைக்கு (László Krasznahorkai) வழங்கப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கான இந்த உயரிய பரிசை வென்ற இரண்டாவது ஹங்கேரியர் இவர் ஆவார்.
71 வயதான க்ராஸ்னஹோர்கை “அழிவின் நிழலில் கூட கலைக்கான சக்தியை வலியுறுத்தும் பார்வையுள்ள எழுத்துக்களுக்காக” கௌரவிக்கப்பட்டார் என நோபல் குழு தெரிவித்துள்ளது.
1954 ஆம் ஆண்டு ஹங்கேரியின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய நகரமான ஜியுலா (Gyula)வில் பிறந்த அவர் கம்யூனிச ஆட்சியில் வாழ்ந்த அனுபவங்களும் பின்னர் மேற்குக் பெர்லினுக்கு சென்றபின் மேற்கொண்ட உலகப் பயணங்களும் அவரது எழுத்துக்களுக்கு பெரும் தாக்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
அவரது நாவல்கள், குறுநாவல்கள் மற்றும் கட்டுரைகள் பெரும்பாலும் ஜெர்மனி மற்றும் ஹங்கேரி நாடுகளில் பிரபலமானவை. “அவர் ஒரு மயக்கும் எழுத்தாளர்.
அவர் உருவாக்கும் உலகம் வாசகரின் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என அவரது ஆங்கில மொழிபெயர்ப்பாளர், கவிஞர் ஜார்ஜ் ஸிர்டிஸ் குறிப்பிட்டுள்ளார். க்ராஸ்னஹோர்கையின் எழுத்து பாணி மிகவும் கடினமானதும் ஆழமானதுமானது.
அவர் ஒருமுறை தனது பாணியை “பைத்தியத்தின் எல்லை வரை நிஜத்தை ஆராய்வது” என்று விவரித்தார். நீண்ட வாக்கியங்கள் மற்றும் குறைந்த பந்திகள் (paragraphs) அவரின் எழுத்தின் அடையாளங்களாகும்.
அவரது முக்கிய படைப்புகளில் “சாத்தான்டாங்கோ (Satantango)” மற்றும் “தி மெலன்கலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ் (The Melancholy of Resistance)” ஆகியவை ஹங்கேரிய இயக்குனர் பெலா டார் (Béla Tarr) இயக்கத்தில் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
இப்போது 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த நோபல் பரிசை வெல்வதன் மூலம் க்ராஸ்னஹோர்கை, டோனி மோரிசன், எர்னெஸ்ட் ஹெமிங்வே, கசுவோ இஷிகுரோ போன்ற இலக்கிய மாமேதைகளின் பட்டியலில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு இந்த பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்பட்டது.