மற்றொரு தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை

0
26

போதைப் பொருள் கடத்தி குற்றச்சாட்டில் மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்பவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் 51.84 கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்தியதற்காக மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்பவருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது” என்று பன்னீரின் சகோதரி சங்கரி பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி மற்றொரு மலேசியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இரண்டு வாரங்களில் சிங்கப்பூரில் இரண்டாவது முறையாக பன்னீர்செல்வத்தின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் கடுமையான சட்டங்களின்கீழ் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தல் குற்றத்துக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.

“இரண்டு வாரங்களுக்குள் தூக்கிலிடப்பட்ட இரண்டாவது மலேசியர் பன்னீர் ஆவார். சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மலேசிய அரசாங்கம் இதில் தலையிட வேண்டும்” என்று பன்னீரின் குடும்ப சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்பட்ட சமயத்தில் பன்னீர் தனது வாழ்க்கையை மாற்றியமைத்து ஓர் எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஆர்வலராக இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது குடும்பத்துடன் இணைந்து நிறுவிய ஒரு அரசு சாரா நிறுவனம் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்ததாகவும் கூறப்படுகின்றது.

கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகத்துக்கு வெளியே நேற்று பன்னீர் குடும்பத்தின் ஆதரவாளர்கள் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சிங்கப்பூர் அரசாங்கம் கருணை காட்டும்படி கோரினர்.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் திகதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஹெராயின் கடத்தியதற்காக 2017ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் பன்னீர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது மேல்முறையீடு மற்றும் கருணை மனு பின்னர் நிராகரிக்கப்பட்டது.

கடந்த மாதம், சிங்கப்பூர் இதேபோன்ற குற்றத்திற்காக மற்றொரு மலேசியரான கே. தட்சிணாமூர்த்தி (39) என்பவரின் மரண தண்டனையை நிறைவேற்றியது. இது போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான அதன் கடுமையான நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறமை குறிப்பிடத்கதக்து.