விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே தொலைபேசி உரையாடல் – கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை

0
85

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையில் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலை இரு தரப்பினரும் உறுதி செய்துள்ளனர். கடந்த ஆறாம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த கலந்துரையாடல் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு திமுக அரசை வீழ்த்த ஒரு கூட்டணியை அமைக்கலாம் என்ற யோசனையை எடப்பாடி பழனிசாமி முன்வைத்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதற்கு விஜய் நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை என அதிமுக தரப்பினர் தெரிவித்துள்ளனர். கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து பின்னர் தனது பிரசாரத்தை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக விஜய் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கவும், ஜனவரி மாதத்திற்குப் பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுப்பதாகவும் விஜய் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதை தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். மேலும் இந்த உரையாடலின் விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.