தம்புள்ளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மிளகாய் தூள் என நினைத்து இரசாயனப் பொருளை சுவைத்த ஏழு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையின் தரம் ஏழில் கல்வி கற்கும் மாணவர்கள், விஞ்ஞான ஆய்வகத்தில் இருந்த சிவப்பு நிற இரசாயனப் பொருளை மிளகாய் தூள் என நினைத்து சுவைத்துள்ளனர்.
குறித்த மாணவர்களுள் ஐந்து மாணவர்களும் இரண்டு மாணவிகளும் உள்ளடங்குவதுடன் அவர்கள் சிகிச்சைகளுக்காக தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரும்பைக் கண்டறியப் பயன்படும் இரசாயனப் பொருளை மாணவர்கள் சுவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பெறப்பட்டதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.