”மலையக அரசியல் தலைமைகள் பேரினவாத அரசியல் சக்திகளோடு சேர்ந்து கதிரை அரசியல் செய்ய நினைப்பதையும், வாக்களித்த மக்களுக்கு வாய்க்கரிசி போட நினைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மலையக மக்களின் தேசியம் காக்கவும், இருப்பு காக்கவும் கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் அரசியல் செய்ய மலையக அரசியல் தலைமைகளாக ஒன்று சேர வேண்டும்.
இவ்வாறு மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
”தேசிய மக்கள் சக்தி நிறைவேற்று அதிகாரத்தை தமதாக்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அதன் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியும் ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றின்போது வழங்கிய வாக்குறுதியையும், ஹட்டன் பிரகடனத்தையும் முழுமையாக நம்பியே மலையக மக்கள் வாக்களித்தனர்.
எனினும் இவற்றை தற்போது மறந்து ‘வளமான நாடு, அழகான வாழக்கை” வேலை திட்டத்திலிருந்து மலையக மக்களை தூரமாக்கும் பேரினவாத அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இதனை இப்படியே வளர விடுவது இனவாத மற்ற ஆட்சி என்பதற்கு எதிரானது மட்டும் அல்ல அதுவே மலையக மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இன அழிப்பு வேலைத்திட்டம் எனவும் கூறுகின்றோம்.
மலையக மக்கள் தமிழர்கள் என்பதற்காகவும், தொழிலாளர் என்பதற்காகவும் ஒடுக்கப்படுகின்றனர். அவர்கள் அரை அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர் என சிறுபான்மை இனங்கள் தொடர்பாக ஆராய இலங்கை வந்த ஐ.நா அறிக்கையாளர் பகிரங்கமாக ஊடக சந்திப்பில் அறிவித்துவிட்டு ஐ. நா விலும் அது தொடர்பான அறிக்கை முன்வைத்தார்.
வளமான நாட்டை உருவாக்க 200 வருடங்களாக உழைக்கும் மலையக மக்களுக்கு அழகான வாழ்வு கொடுக்க கடந்த அரசாங்கங்களைப் போல புதிய அரசாங்கத்திடம் எந்தவித வேலைத்திட்டமும் இல்லை என்பது ஆட்சியாளர் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதோடு, இவர்கள் காலத்திலும் இன அழிப்பு தொடரும் எனும் அச்சத்தையே தோற்றுவித்ள்ளது.
மலையக மக்கள் சுதந்திரத்துக்கு முன்னரான காலனித்துவ ஆட்சியின் கீழ் ஏற்றுமதி பொருளாதரத்தின் தொழிலாளர்களாக பெருந்தோட்டமெனும் சிறைக்குள் அடைக்கப்பட்டவர்களாகவே வைக்கப்பட்டிருந்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் சுதந்திர இலங்கையில் பொருளாதார, அபிவிருத்தி பொருளாதார வேலைத்திட்டங்களுக்குள் உள்வாங்காது சிதைவுகுள்ளாகும் மக்கள் சமூகமாகவே வைக்கப்பட்டிருந்ததே வரலாறு.
இந்நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட மலையக அதிகார சபை தேர்தல் ஆக இயங்குவதற்கான வழிவகைகளை செய்யாது அதனை ஓர் அமைச்சுக்கு கீழ் உள்வாங்கி அதிகார சபையை முடக்குவதற்கு இன்னொரு காலத்தில் முழுமையாக இல்லாத அளிப்பதற்கும் எடுக்கப்படும் முயற்சியானது மலையக தமிழர்கள் தேசிய இனமாக வளர்வதை தடுக்கும் மறைமுக இனவாத செயல்பாடு என்றே அடையாளப்படுத்தலாம்.
மாவலி அதிகார சபை வடக்கின் ஆணையிரவுக்கு அப்பால் யாழ் வளைகுடா வரை சிறகடித்து பறக்கையில் மலையக அதிகார சபையினை கொலை செய்ய எடுக்கும் தீர்மானம் மக்களாட்சி நிலவுகின்றது எனக் கூறும் தேசிய மக்கள் சக்தியின் கூற்று மலையக மக்களைப் பொறுத்தவரை போலியானதாகவே அமைகின்றது.
தேசிய மக்கள் சக்தி தமது ஹற்றன் பிரகடனத்திற்கு எதிராக செயல்படுவது ஏன்? மலையகத்தில் காணப்படும் வெற்று காணிகள், பயிரிடாத காணிகள் மலையக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் கூறியதும், தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் கொடுக்கப்படும் என அதேப் பதவிவகித்த ரணில் விக்ரமசங்க கூறியதும் அரசமட்ட தீர்மானமாக அமையாத நிலையில் தேசிய மக்கள் சக்தி மலையக மக்களுக்கு காண கொடுக்கப்படும் எனக் கூறியதை மறந்து பயன்படுத்தாத பெருந்தோட்ட அரச காணிகள் வேறு பொருளாதார உருவாக்கத்திற்காக அதனை முதலாளித்துவத்தின் கைகளிலே ஒப்படைப்பது எந்த வகையில் நியாயமாகும்.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் வரலாற்று வாழ்வியல் தொன்மை கருதி பழமை வாய்ந்த கட்டடங்கள் பாவனையில் இருந்த பொருட்கள், பாண்டங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படுவது நாம் அறிந்ததே. மலையகத்தில் அவ்வாறான அவ்வாறானவை அடையாளம் காணப்பட்டுள்ளதா? அப்பிரதேசத்தை பாதுகாப்பதற்கானத் திட்டங்கள் வரையப்பட்டுள்ளன வா?
அண்மையில் நடந்த மலையகம் தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பௌத்த சமய கலாச்சார அலுவலக அமைச்சர் சுனில் செனவி ‘உலக மரபுரிமை பிரதேசமாக மலையகம் உள்வாங்கவும் சுற்றுலா தலமாக மாற்றி அமைக்கப்படும்” என தெளிவாக கூறினார். இது மலை மக்களையும் அவர்களுடைய உழைப்பையும் காட்சிப் பொருளாக்கி நாட்டுக்கு பணம் உழைக்கும் செயற்பாடே தவிர வாழ்வை உயர்த்தும் செயற்பாடல்ல. அந் நிகழ்வில் 1981ல் எரிக்கப்பட்ட யாழ் நூலகத்திற்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். மலையக மக்களின் உயர்வுக்கான வேலை திட்டம் அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எதனையும் அவர் கூறவில்லை.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற, வாழ்வுக்கேற்றதும் நியாயமானதுமான ஊதியம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் பெற்றுக் கொடுப்பதாக கூறிய ரூபா 1700 நாங்கள் பெற்றுக் கொடுப்போம் என கூறுகின்ற ஆட்சியாளர்கள் அது காலத்திற்கு ஏற்ற ஊதியமா என சிந்திக்க தவறுவதும் காலத்துக்கேற்ற வாழ்வுக்கேற்ற கௌரவமான ஊதியத்தை கொடுக்காமல் இருப்பதும் மலையக மக்கள் ஏழ்மைக்குள்ளும் வறுமைக்குள்ளும் தள்ளி சிறைவைக்கவே வழிவகுக்கும்.
வடக்கு கிழக்கில் நிகழ்ந்த இனப்படுகொலை இன அழிப்பு இன சுத்திகரிப்பிற்கு எதிராக நீதி கேட்டு அங்கு ஏதோ ஒரு வகையில் நாளாந்தம் மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறன. மலையக மக்களுக்கு எதிராக சலனமற்ற இன அழிப்பு நடக்கையில் மலையக அரசியல் தலைமைகள் மௌனம் காப்பது ஏன்?
மலையக கூட்டு கட்சிகளின் தலைவர் ஒருவர் தனித்து வடக்கின் போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். ஒடுக்கப்படும் மக்கள் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தோடு ஒன்றினைய வேண்டும். அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இவர் தனித்து கலந்து கொண்டதன் மர்மம் என்ன?மலையகத்தின் ஆதரவை வெளிப்படுத்த தவறியதேன்?
மலையக அரசியல் தலைமைகள் பேரினவாத அரசியல் சக்திகளோடு சேர்ந்து கதிரை அரசியல் செய்ய நினைப்பதும் வாக்களித்த மக்களுக்கு வாய்க்கரிசி போட நினைப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. மலைய மக்களின் தேசியம் காக்கவும், இருப்பு காக்கவும் கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் அரசியல் செய்ய மலையக அரசியல் தலைமைகளாக ஒன்று சேர வேண்டும். அதுவே மலையகக்கத்துக்கான பலமாக சக்தியாக அமையும். மலையகத்தின் எதிர்காலம் காக்கப்படும். இல்லையேல் மலையகம் காணாமல் போய்விடும் அபாயமுள்ளதையும் உணர்வோம்.” – என்றுள்ளது.