ரணில், ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி – அரசுக்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம்

0
34

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்ப்பு பேரணியை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்துவரும் சர்வாதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக இந்த பேரணியை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி குறித்த பேரணி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடி கலந்துரையாடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், உறுப்பினர்களின் விசேட சந்திப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வில் 25 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது சமகால அரசியல் விடயங்கள் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தொடர்ந்தும் செயற்படுவது உட்பட பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து யோசனைகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்கள் இணக்கம் தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.