இலங்கையிலும் பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுக்கும் இந்திய அணி

0
72

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நிறைவடைந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொண்டன. அந்த மூன்று போட்டியிலும் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர்.

மேலும் பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவருமான மோசின் நக்வி வசமிருந்து ஆசிய கோப்பையைப் பெற முடியாது என இந்திய அணி தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு இந்த தொடரில் கோப்பை வழங்கப்படவில்லை.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் அணியின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது.

“என்னால் எதையும் கணிக்க முடியாது, ஆனால் அந்த குறிப்பிட்ட விரோத நாட்டுடனான எங்கள் உறவு அப்படியே உள்ளது. கடந்த வாரத்தில் எந்த மாற்றமும் இல்லை” என்று சைகியா கூறினார்.

“இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியை கொழும்பில் விளையாடும் மேலும் அனைத்து கிரிக்கெட் நெறிமுறைகளும் பின்பற்றப்படும். கிரிக்கெட்டின் MCC விதிமுறைகளில் என்ன இருந்தாலும் அது செய்யப்படும் என்று நான் உறுதியளிக்க முடியும்.

“கைகுலுக்கல்கள் இருக்குமா, கட்டிப்பிடிப்புகள் இருக்குமா இந்த நேரத்தில் எதையும் நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியாது.” என்றார் அவர்.