காசா மக்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு – நெதன்யாகு

0
26

இனி காசாவிலேயே இருப்பவர்கள் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்பின் இஸ்ரேல் – காசா போர் நிறுத்தத்திற்கான 20 பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார். ஆனால் அதை இன்னும் ஹமாஸ் ஏற்றுக் கொள்ளவில்லை.

மத்தியக் கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதலால் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இஸ்ரேல் தாக்குதலில் பெரும்பாலான ஹமாஸ் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இதனால் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றே சர்வதேச நாடுகள் வலியுறுத்துகின்றன. இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

‘ஹமாஸை தனியாக விட்டுவிட்டு தெற்கு பகுதிக்கு செல்ல நினைக்கும் காசா மக்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. இனி காசாவிலேயே இருப்பவர்கள் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள்’ என நெதன்யாகு கூறியுள்ளார்.

ஹமாஸ் இந்தப் பரிந்துரைகளை ஒப்புக்கொண்டால், காசா மக்கள் காசாவிலேயே வசிக்கலாம் என்று ட்ரம்பின் 20 பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஹமாஸிடம் இருந்து இன்னும் பதில் வராத நிலையிலேயே நெதன்யாகு காசா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கெனவே பல மக்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துவிட்டனர். இன்னும் சிலர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். இவர்கள் காசாவை விட்டு நீங்கினாலும், இவர்களுக்கு வேறு பகுதியில் இடம் இருக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகமே. காரணம் முன்னர் வெளியேறிய மக்கள்களால் அந்த இடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது.

இனி காசாவில் இருப்பவர்கள் அங்கேயே தொடர்ந்தாலும், அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் காத்துள்ளது. இஸ்ரேல் இவர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தும். இஸ்ரேல் ராணுவம் காசா நகரத்தை முழுமையாகச் சுற்றி வளைத்து வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும், “காசா நகரத்தில் உள்ள ஹமாஸ் போராளிகளைத் தனிமைப்படுத்துகிறோம். எனவே, பாதுகாப்பாகத் தெற்குப் பகுதிக்குச் செல்ல விரும்பும் மக்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. இதையும் தாண்டி காசாவில் தங்குபவர்கள் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத ஆதரவாளர்களாகக் கருதப்படுவார்கள்” என்றும் அவர் எச்சரித்தார்.

மத்திய காசாவை மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் நெட்சாரிம் வழித்தடத்தை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும் இதன் மூலம் காசாவின் வடக்குப் பகுதி, தெற்குப் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

காசாவில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் மக்கள் இஸ்ரேல் இராணுவச் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லலாம் என்றும் அவர்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இஸ்ரேலின் ஆக்ரோஷமான தாக்குதல்களை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இராணுவ தாக்குதலை இஸ்ரேல் கைவிட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்துகின்றன. இருப்பினும் ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போரை நிறுத்த முடியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக கூறியுள்ளது.