யுத்தமின்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசிய ஒற்றுமையை நாம் உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி

0
27

இலங்கையில் இனியொரு போர் ஏற்படாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே மேலும் மோதல்கள் இல்லாத வகையில் நாட்டை ஆளுவதே எங்கள் அணுகுமுறையாகும்.

வடக்கின் மக்கள் போரினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இனிமேல் போர் இல்லாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

வடக்கு மக்களுக்கு தேவையான அபிவிருத்தி மற்றும் சட்டப் பாதுகாப்பு வழங்கி சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ள ஒரு நாட்டையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று அங்குள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாடிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில் எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது என்றும், சிறந்த இராஜதந்திர உறவுகள் இலங்கையை உலகின் உச்சத்திற்கு உயர்த்தும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும் இலங்கை வரலாற்றில் எந்த இன மோதல்களும்  தலைதூக்காத ஆண்டாக கடந்த வருடம் வரலாற்றில் இணைவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையிலோ அல்லது நாட்டிற்கு வெளியேயோ வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் தனிப்பட்ட சலுகைகள் அல்லது  நலன்களை எதிர்பார்த்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை.

அவர்கள் அனைவரும் எதிர்பார்த்த மாற்றத்திற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் அரசாங்கத்தின் ஒரு வருட பயணத்தின் வெற்றியை அளவிட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கவில்லை என்றும் எதிர்காலத்தில் சில வரி விகிதங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கட்டியெழுப்பப்படும் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்காளராகுமாறு ஜப்பானில் வாழும் இலங்கையரிடம் இதன் போது ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

தமது எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றவும் நாங்கள் பாடுபடுகிறோம். போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த நாங்கள் பாடுபடுகிறோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.