நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று காலை கோட்டை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார். கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் ‘தப்பே செய்யாத ஆள் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளீர்கள்’ என கேட்டதற்கு, ‘சரி சரி உங்கள் வேலையை பாருங்கள்’ என சொல்லியபடி பொலிஸ் நிலையத்திற்குள் செல்லும் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை போக்குவரத்து பொலிஸார் விசாரித்துள்ளனர்.
இதன்போது காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல் உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொண்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தை மீறியதாக கூறி கோட்டை பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு பி அறிக்கையை சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி மீது தவறான வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே அண்மையில் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.