21 மாதங்களில் 27 கோடி ரூபா சொத்து; கிடுக்கி பிடியில் கெஹெலிய மகன்!

0
35

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக நேற்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவி வகித்த 21 மாத காலத்தில் ரமித் ரம்புக்வெல்ல 27 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை ஈட்டியுள்ள தகவலை வௌிப்படுத்த தவறியமைக்காகவே அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விபரங்களை வௌிப்படுத்த தவறிய சொத்துக்களில் சொகுசு வீடு மற்றும் ஜீப் ரக வாகனம் உள்ளிட்ட மேலும் பல சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகவும் ரமித் ரம்புக்வெல்ல பணியாற்றியிருந்தார்.

இதன்படி 2022 ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து 2023 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி வரையான 21 மாத காலத்தில் அவர் 296,566,444.76 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஈட்டியுள்ளார். அவற்றில் 275,302,616.06 ரூபாய் மதிப்புள்ள சொத்து எவ்வாறு ஈட்டப்பட்டமை தொடர்பில் அவர் வௌிப்படுத்த தவறியுள்ளார்.

மேலும், கையகப்படுத்திய விதத்தை வெளியிட முடியாத சொத்துக்களில், கொழும்பு 07, தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள ஒரு சொகுசு வீட்டு வளாகத்தில் ரூ. 80 மில்லியன் மற்றும் ரூ. 65 மில்லியன் மதிப்புள்ள இரண்டு வீடுகள் உள்ளன.

ரமித்தின் பெயரில் 4 வங்கிக் கணக்குகள் அவரது மனைவிக்கு சொந்தமான 4 வங்கிக் கணக்குகள் மற்றும் 18 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள டிஸ்கவரி ஜீப் மற்றும் பல சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட ரமித் ரம்புக்வெல்ல மற்றும் அவரது மனைவியின் பெயரில் வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்புத் தொகைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் வெளிப்படுத்தியுள்ளது.