செம்மணி மனிதப் புதைகுழியில் 4-5 வயதுடைய சிறுமியின் எலும்பு: அடுத்தது என்ன?

0
21

குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனித புதைகுழியில் நான்கு அல்லது ஐந்து வயதுடைய ஒரு சிறுமியின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அகழ்வாய்வினை நடத்திய தடயவியல் நிபுணர்கள், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

செம்மணி மனித புதைகுழியிலிருந்து நெருக்கமான தொடர்புடையவர்கள் என நம்பப்படும் சிறுவர்களின எலும்புக்கூடுகளும் அகழந்து எடுக்கப்பட்டுள்ளன.

தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஜூலை 15ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை தெரிவித்ததாக காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) நிர்வாக பணிப்பாளர், சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரவிக்கின்றார்.

மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு குறித்த அறிக்கையையும், நீல நிறப் பை, காலணிகள் மற்றும் சிறு பிள்ளையினுடையது என சந்தேகிக்கப்படும் பல மனித எச்சங்களுடன் கண்டெடுக்கப்பட்ட 25 ஆம் இலக்க மனித எலும்புக்கூடு குறித்த அறிக்கையையும், ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவவிற்கும், சட்ட வைத்திய அதிகாரி, செல்லையா பிரணவனுக்கும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதுவரை மீட்கப்பட்ட 65 எலும்புக்கூடுகளில் சிறுவர்களினுடையது என நம்பப்படும் மூன்று எலும்புக்கூடுகளுக்கு இடையில் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் காணப்படுவதாக தடயவியல் நிபுணர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் (OMP) தெரிவித்துள்ளது.

“எஸ் 25, எஸ் 48, எஸ் 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களுடையது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் குறித்து ஆய்வு முக்கியமானதாக காணப்படுகின்றது. அவர்களுடைய உடைகள், துணிகள், அவர்களுடைய பண்பியல் தொடர்பாக எலும்பியல் தொடர்பாக ஒருமித்த தன்மை இருப்பதாக சொல்லப்பட்டது. ஒரு எலும்புக்கூடு 4-5 வயதுடைய சிறுமியுடையதாக இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்” என ஜூலை 15 அன்று நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) நிர்வாக பணிப்பாளர், சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரிவித்தார்.

மனித புதைகுழியில் குற்றச் செயல்கள் இடம்பெற்றமைக்கான அறிகுறிகள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்த இரண்டு நிபுணர்களும், உடல்கள் முறையாக அடக்கம் செய்யப்படாமை குறித்து மேலும் விசாரணைகள் தேவை என நீதிமன்றத்தில் தெரிவித்ததாக சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகளை சுழற்சி முறையில் கண்காணிக்க முடியும் என நீதவான் அறிவித்துள்ளதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் தெரிவிக்கின்றார்.

மக்கள் பிரதிநிதியாக அகழ்வாய்வுப் பணிகளைக் கண்காணிப்பது குறித்த தனது கோரிக்கை தொடர்பில் பரிசீலிப்பதாக நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா தெரிவித்ததாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் ஸ்ரீதரன் வழக்கு விசாரணையின் பின்னர் ஊடங்களிடம் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள், நிபுணர்கள் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள நீதிமன்றம், தேவையில்லாத கட்டுக்கதைகளையும், புனைகதைகளையும், கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் தேவையில்லாத கருத்துக்களையும் பரப்புவதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளதாக, காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) நிர்வாக பணிப்பாளர், சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரிவித்தார்.

ஓகஸ்ட் 6 ஆம் திகதி செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வாராய்வு இடத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

26 வருடங்களுக்கு முன்னர் செம்மணிப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட மனித உடல்கள் மற்றும் தற்போது மீட்கப்படும் உடல்கள் தொடர்பான வழக்குகளை ஒருங்கிணைக்குமாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) தலைமை அண்மையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் கோரியிருந்தது.

செம்மணிப் புதைகுழியில் இருந்து தற்போது தோண்டி எடுக்கப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான குற்றவியல் நிலைமை, 1999ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட 15 உடல்களுடன் நேரடியாக தொடர்புடையதாகத் தெரிவதாக சுட்டிக்காட்டும் அந்தக் கடிதம், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மற்றும் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளை இணைக்காமல் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை எதிர்பார்க்க முடியாது என்பதை ஜனாதிபதியிடம் மேலும் வலியுறுத்தியுள்ளது.